விட்டுப் பிடிப்பது? எல்லோருமே அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தாம். இவை, பேச்சு வழக்கிற்கு வேண்டுமானால் சரிப்பட்டு வருமே தவிர, நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. விட்டால் விட்டது தான். என்னதான் மறுபடியும் பிடித்தாலும், விட்டதால் உண்டான உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக, ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஒருவர், அதை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். புது இடத்திலும் ஏதோ பிரச்னை ஏற்பட, மறுபடியும் பழைய நிறுவனத்திற்கே வந்தார்.

இப்போது அவருக்குப் பழைய சம்பளம் வராது. அவர் புது தொழிலாளியாகத்தான் கருதப்படுவார், வருகைப் பதிவேடும் அதைத்தான் பதிவு செய்யும். அவருடைய பழைய அனுபவம் (சர்வீஸ்) ஒதுக்கப்பட்டு, புது வரவாகத் தான் கருதப்படுவார் அவர். அப்போது, “ஹ! விட்டதை (பழைய வேலையை)ப் பிடிச்சிட்டேன் பார்!’’ என்று யாருமே குதூகலிக்க மாட்டார்கள். இவ்வாறு, ஓரளவிற்கு முயன்றால் கிடைக்கக்கூடியவைகளின் நிலையே இப்படியென்றால், சுலபத்தில் அடைய முடியாத தெய்வ நிலையைப்பற்றிச் சொல்ல முடியுமா? இதைப்பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் ? பார்க்கலாம்.

விட்டுப்பிடிப்பது ஏன்? மேதகு
ஜோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலை
யாப் பெருமையை எட்டும் என்
ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே
(திருமந்திரம் – 289)

கருத்து: பேரருள் பெரும் ஜோதியாக இருப்பவர் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை விட்டுப்பிடிப்பது என்பது, நடக்கக்கூடிய செயலா? பிடிக்குள் அகப்படும் பொருளா என்ன பரமன்? ஆகையால், இறைவனின் அருள்ஔியைத் தொட்டுத் தொடர்வேன் நான்; அதன் மூலம் அழியாப் பெருமையைப் பெறுவேன். என் ஆருயிராய் (உயிருக்கு உயிராய்) கலந்து, என்னுள் இருக்கும் ஈசனோடு இரண்டறக் கலப்பதன் மூலம், நான் இறையருள் வெள்ளத்தில் அமிழ்ந்து மூழ்குவேன்.

விளக்கம் பார்ப்பதற்கு முன், மாணிக்கவாசகரைத் தரிசித்து விட்டு வரலாம் வாருங்கள்!
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து,
நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா
ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
– என்பது மணிவாசகர் வாக்கு.

நூறு பவுன் உள்ள ஆபரணங்கள் இரண்டு உள்ளன. இரண்டும் ஒரே வகைதான்; அலங்கார வேலைப்பாடுகளில் தான் கொஞ்சம் வேறுபாடுகள் இருந்தன. அதுபோல, மாணிக்கவாசகரின் இந்தப் பாடலும், திருமூலரின் ‘விட்டுப் பிடிப்பது ஏன்?’ என்ற பாடலும், ஒரே ஆனந்தமயமான தகவலைக் கொண்டதுதான்; வார்த்தைகளில்தான் சிறிதளவு மாறுபாடுகள் உள்ளன.

தெய்வீக அனுபவத்தில் கரைகண்ட மாணிக்கவாசகர், சிவபெருமானைப் பற்றி விரிவாகச் சொல்லி விட்டு, ‘யான் உனைத் தொடர்ந்து ‘சிக்’கெனப் பிடித்தேன். இனிமேல் நீ எங்கு போவாய்?’ எனக் கேட்கிறார். அப்பப்பா! தெய்வீகத்தில்தான், என்ன அனுபவம்! அனுபவத்தை விவரித்து, அதில் தொடர்ந்து ஈடுபட்டு, இறைவனைப் பிடித்தாராம்! இதே தகவல்தான் திருமூலரின் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.

‘தொட்டுத் தொடர்வன். என் ஆருயிராய் நின்ற ஈசனை மட்டுக்கலப்பது’ என்கிறார் திருமூலர். நல்லவற்றை அனுபவத்தில் கொண்டு வராதவரை, இறையருளை எதிர்பார்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. உதாரணமாக, பள்ளிக்கூடம் போகிறோம்; படிப்பைப் பெற்றுத் திரும்புகிறோம். நதிகளுக்குச் செல்கிறோம்; நீராடித் திரும்புகிறோம். இப்படி எங்கு போனாலும், ஏதேனும் ஒரு பயன்பெற்று திரும்புகிறோம். சரி! கோயிலுக்குப் போய்த் திரும்புகிறோம். என்ன பெற்றுத் திரும்பினோம் என்று கேட்டால்?

“புளியோதரை, பொங்கல், பஞ்சாமிர்தம், வடைன்னு எல்லாம் கிடைக்கும். அந்தக் கோயில் பிரசாதத்துல, முந்திரிப்பருப்பு கூட இருந்தது. இந்தக் கோயில் பிரசாதத்துல ஒன்னக்கூடக் காணோம். அந்தக் கோயில்ல குடுத்த வடை, பெருசா இருந்ததே தவிர, டேஸ்ட்டே இல்ல. இந்தக் கோயில்ல குடுக்கற வடை சின்னதா இருந்தாலும், ருசியோ ருசி!” என்பது தான் கண்ட பலனாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றையும் காணோம். ஜோதி மயமான / ஔி மயமான இறைவனின் பெருமையை விவரித்து விளக்கும் எத்தனை ஆலயங்கள் ! அந்த ஆலயங்களில் இருக்கும் தெய்வங்களின் மகிமை!

தந்தை சொல் மீறாத தியாகசீலர்- ஸ்ரீராமர். குழந்தைகளுடன் சரிக்குச் சரியாக விளையாடி, அவர்களுக்கு நேர்ந்த துன்பங்களில் இருந்து, அவர்களைக் கட்டிக் காப்பாற்றிய கண்ணன். அன்பர் தொண்டே ஆண்டவன் தொண்டு என்று இருந்த நாயன்மார்களைத் தேடிப்போய் அருள் செய்த சிவபெருமான். உத்தமர்களான முனிவர்களுக்குத் துயர் விளைவித்த அசுரர்களை சங்காரம் செய்த அம்பாள்; ‘Hate the sin. Not the sinners’ பகையை வெறு! பகைவனை வெறுக்காதே! பகைமையைக் கொல்! பகைவனைக் கொல்லாதே! – என்பதற்கு இணங்க, சூரபத்மன் கொண்ட பகையைக் கொன்று – பகைவனான அவனைக் கொல்லாமல் தனக்கு வாகனமாகக் கொண்டு அருள்புரிந்த முருகன்.

ஜீவராசிகள் அனைத்தையும் தனக்குள் கொண்டு, அனைத்தும் ஒன்றென விளக்கிக் காட்டும் யானை முகக் கடவுளான விநாயகர். இப்படி ஒவ்வொன்றையும் விவரித்து விளக்கிக் காட்டும் தெய்வத் திருக்கோயில்களுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, அந்தத் தெய்வத்திடம் இருந்து ஒரு நற்குணத்தையாவது பெற்றுத் திரும்ப வேண்டாமா நாம்? வழிபட வேண்டாமா? வழிபடாத வழிபாடு என்ன பலனைத் தரும்? ஆழமான, அழுத்தமான, அவசியமான இந்தத் தகவலைத்தான், ‘தொட்டுத் தொடர்வன் ஈசனை’ என்றார் திருமூலர். இவ்வாறு கூறியதுடன் நிறுத்தவில்லை திருமூலர்; ‘மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே’ என்று சொல்லி, முன் கூறியதை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்து, பாடலை நிறைவு செய்கிறார்.

நறுமணம் மிகுந்த வாசனை திரவியங்கள் கலந்த தீர்த்தத்தைக் கொண்டு, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விப்பார்கள்; கோயில்களில் இதைக் கண்டிருக்கலாம். விசேஷமாகச் சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேல், ஒரு சிறு பாத்திரம் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் இருந்து தைல தாரை போல, இடைவிடாமல் தீர்த்தம் சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டே இருக்கும்.

அதுபோல, உள்ளத்தில் இறைவனை வைத்து, தூய்மையான அன்பால் எப்போதும் இறைவனை முழுக்காட்ட வேண்டும் என்கிறார் திருமூலர். “அடப்போங்க சார்! திருமூலர் சொல்றதுதான், இப்ப நல்லா நடக்குதே! கோயிலு, பூஜை, பரிகாரம்னு இப்ப எல்லாக் கோயில்லேயும், கும்பல் அப்பிக் கெடக்குதே! இருந்தாலும் சாமி அருள் செஞ்சா மாதிரியும் தெரியல; பிரச்னைங்க தீந்தா மாதிரியும் தெரிலியே” என்ற எண்ணம் எழலாம். அதற்கான பதிலையும் திருமூலர் சொல்கிறார்.

ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு
செய்வார்களைத்
தேசுற்று அறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்து எம்மிடை ஈண்டி நின்றானே
(திருமந்திரம் – 288)

கருத்து: இரவு பகல் என்று பார்க்காமல், எந்த நேரமும் தன் மீது பாசம் வைத்து அன்பு பாராட்டுபவர்கள் யார் என்று, ஈசனுக்குத் தெரியும். ஜோதி வடிவான ஈசனை அறிந்து, செயலற்று இருந்தால், ஈசன் நம்மை நாடிவந்து, நமக்குள் புகுந்து நல்லருள் புரிவார். ஆலயங்களில் கூடும் கும்பலுக்கும், நாம் செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வழிபாட்டிற்கும், தெய்வமோ/ திருமூலரோ பொறுப்பேற்க மாட்டார்கள்.

இரவும் பகலுமாகத் தெய்வத்திடம் பக்தி வைத்து, அன்போடு செயல்படுபவர்களைப் பற்றித் தெய்வத்திற்குத் தெரியும். பெரியபுராணமும் திருவிளையாடல் புராணமும் இதை விரிவாகவே கூறுகின்றன. ஆண்டவனிடம் பக்தி செலுத்தி, அடியார்களுக்கு அன்போடு தொண்டு செய்த திருநீலகண்ட நாயனார் முதலானவர்களைத் தேடித் தெய்வம் போய் அருள்புரிந்த வரலாறுகளும் அந்நூல்களில் இடம் பெற்றிருக்கின்றனவே!

ஆகவே, உண்மையிலேயே பக்தி செலுத்துபவர்கள் யார் என்பதை இறைவன் அறிவார். அதற்கேற்றவாறு அருளும் புரிவார். அடுத்தது, இப்பாடலில் ‘இராப்பகலும்’ என்பது, இரவு பகலாகப் பக்தி செலுத்துபவர்கள் என்பதைக் குறிப்பதோடு, மற்றோர் ஆழ்ந்த நுண்பொருளையும் குறிப்பிடுகிறது. இரவு பகலாக – என்பதில்; ‘இரவு’ துன்பத்தையும், ‘பகல்’ இன்பத்தையும் குறிக்கும். அதாவது, துன்பம் – இன்பம் எனும் இரண்டில் எது வந்தாலும் , அதைப் பொருட்படுத்தாமல், இறைபக்தியில் ஈடுபடுபவர்கள் என்பது பொருள். பார்வையை இழந்த நிலையிலும் பரமனைப் பாட மறக்காத சுந்தரமூர்த்தி சுவாமிகள். கல்லில் கட்டிக் கடலில் வீழ்த்திய போதும் பரமனைப் பாடிய அப்பர் சுவாமிகள் எனப் பலரும், துன்பம் வந்த வேளையிலும் இறைவனை மறவாதவர்கள்.

சேரமான் பெருமாள் நாயனார், தெய்வமே நேருக்கு நேராக வந்து ஞானப்பால் ஊட்டிய ஞானசம்பந்தர் முதலானோர், இன்பமான உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், இறைவனை மறவாதவர்கள். கஷ்டகாலத்தில் கடவுளை நினைத்தாலும், செல்வம் பதவி புகழ் என வந்துவிட்டால், தெய்வ பக்தி தானாகவே ஒதுக்கப்பட்டு விடும். இது இயல்பு. இந்த இயல்பையும் மீறி, இன்பம் வந்துற்ற போதும் / மகிழ்ச்சியான காலத்திலும் மறவாமல் இறைபக்தியில் ஈடுபடுபவர்கள் தாம் உயர்ந்தவர்கள். இவ்வாறு துன்ப இன்பங்களில் மயங்காமல் தெய்வபக்தி செலுத்துபவர்களைத் தெய்வத்திற்குத் தெரியும். தேடிவந்து அருள்புரியும்.

அடுத்து, இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘செயலற்று இருந்திடில்’ என்பது, ஒரு பெரும் பாடத்தை நடத்துகிறது நமக்கு. செயலற்று இருப்பது எனும் இச்சொற்கள், சோம்பேறித்தனமாக இருப்பதைக் குறி்க்காது. நான் இதைச் செய்தேன்; என்னால்தான் முடியும் இதைச் செய்ய; இதைச் செய்தால் இவ்வளவு வரும்; இதைச் செய்தால் எதிராளிக்கு இவ்வளவு பாதிப்பு வரும் என்றெல்லாம் செயல்படுவது! இந்த எண்ணம் வெளி விளைவுகளைத் தவிர, நம் மனதிலேயே அகம்பாவம் முதலான தீய குணங்களை விதைத்து வளர்த்து விடும். இந்த எண்ணம் வேண்டாமே என்பது தான் செயலற்று எனக் கூறப்படுகிறது. ‘இருந்திடில்’ என்பது, பலாபலன்களைத் தெய்வத்திடம் ஒப்படைத்துவிட்டு, தெய்வ நினைவோடு இருப்பது என்பதைக் குறிக்கும்.

இவ்வாறு இருந்தால், தெய்வம் தேடிவந்து அருள் செய்யும். அருள் செய்வது மட்டுமல்ல; “ஈசனே வந்து என்னுடன் ஒன்றாகச் சேர்ந்து / கலந்து இருந்தார்” என்கிறார் திருமூலர். ஆகா! என்ன வாக்கு! என்ன வாக்கு! சாதாரணமாக ஓர் ஊருக்குப் போவதென்றாலே, அந்த ஊருக்குப் போய்விட்டு வந்தவரின் அனுபவங்கள் – செலவுகள் – வசதிகள் எனப் பலவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம். அந்த மேப், இந்த மேப் என்று பார்த்து எவ்வளவு ஏற்பாடுகள் செய்கிறோம்?

அவ்வளவும் இருந்தாலும், நாம் போய்விட்டு வந்தால் தானே, அனுபவம் கிடைக்கிறது? சாதாரண பயணத்திற்கே இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு? திருமூலர் மாதிரி உள்ள மகான்கள், ஏராளமாகத் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றை உணர்ந்து, கொஞ்சமாவது அனுபவத்தில் கொண்டு வந்தால், தெய்வம் தேடிவந்து அருள் செய்யும்; கூடவே இருந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here