அது ஒரு பெரிய கிராமம். அங்கு பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தாலும் அவர்களில் சிலர் சலியாத உழைப்பாளிகளாகவே காணப்பட்டனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று ஒரு செல்வந்தர் கருதினார். அந்த உதவியும் அவர்களை சோம்பேறியாக்கிவிடக்கூடாது என்பதால் அவர்களுக்கு ஏதேனும் பணி அளித்து அதற்கு ஊதியம் அளிப்பது, அதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவது என்று தீர்மானித்துக் கொண்டார். அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்ததால் அவர்களுக்கு ஏற்ற எளிமையான வேலையாகக் கொடுத்தால் ஊன்றிச் செய்வார்கள் என நினைத்தார். ஓடி ஓடி செய்வதுபோல அல்லாமல் உட்கார்ந்தபடியே செய்யும் வேலையாக இருந்தால் இன்னும் ஊக்கத்துடன் அவர்களால் பணியாற்ற முடியும் என்றும் கருதினார். அப்படி என்ன வேலை கொடுப்பது என்று பல நாட்கள் யோசனை செய்ததில், கடைசியில் கிடைத்தது ஒரு முடிவு.

பஞ்சு, பஞ்சு அரைக்கும் மணை, ராட்டினம், நூல் சுற்றி வைக்கும் சிட்டம் போன்ற பொருட்களை வாங்கி அவற்றை அந்த ஊர் மக்களுக்குக் கொடுத்தார். கூடவே பஞ்சை எவ்வாறு சுத்தப்படுத்துவது, அந்தப் பஞ்சை வைத்து ராட்டினத்தைச் சுழற்றி எவ்வாறு நூல் நூற்பது என்றெல்லாம் கற்றும் கொடுத்தார். பிறகு அவர்களிடம், ‘‘நான் கொடுத்த இந்தப் பொருட்களை நீங்கள் நன்கு பயன்படுத்தி, நூல் நூற்று, அந்த நூலை வாரத்திற்கு ஒருமுறை என்னிடம் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அதற்கு ஈடாக நீங்கள் செய்த வேலைக்கு ஏற்றாற்போல், உங்களுக்கெல்லாம் ஊதியம் தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்,’’ என்று கூறினார். அதேசமயம் அவர்களில் சிலருக்கு ஏற்பட்டிருந்த சில சந்தேகங்களுக்கான விளக்கங்களும் அளித்தார்.

பஞ்சு மற்றும் உடன் தேவையான மற்ற பொருட்கள் வாங்குவது, அவற்றை ஊர் மக்களுக்குக் கொடுப்பது, அவர்கள் கொண்டு வந்து சேர்க்கும் நூல்கண்டு
களுக்குக் கணக்கு வைத்துக்கொண்டு அவற்றுக்கு உரிய ஊதியத்தை அளிப்பது என்று பொறுப்புகளை மேற்கொள்ள ஒரு கணக்குப்பிள்ளையை நியமித்தார்.
ஊராரும், பஞ்சிலிருந்து கொட்டையை நீக்கி, வில்லால் அடித்து, பின்பு பட்டை போட்டு, ராட்டையில் நூற்றார்கள். தம்முடைய நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க உதவிய செல்வந்தருக்கு நன்றி சொன்னார்கள். தாம் நூற்ற நூற்கண்டுகளை வாரந்தோறும் கணக்குப் பிள்ளையிடம் கொண்டு வந்து கொடுத்தனர். அதற்கு ஈடாக மகிழ்ச்சியுடன் ஊதியம் பெற்றுச் சென்றனர். இந்த ஊதியத்தால் தம்முடைய சில தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்துகொள்ள முடிந்தது. அவர்கள் வாழ்வில் சந்தோஷம் நிலவியது.

அதே ஊரில் திருந்தவே திருந்தாத ஜென்மங்களும் இருந்தன. இந்த சொற்ப மக்கள் என்னவோ பஞ்சு, ராட்டினம் எல்லாம் வாங்கிக்கொண்டார்களே தவிர, அவற்றை அப்படியே தூக்கிப் பரணில் வீசிவிட்டார்கள். கொஞ்சமும் பயன்படுத்தவேயில்லை. அதேசமயம், வழக்கமான அரட்டையிலும், வீண் பொழுதுபோக்கிலும் காலத்தைக் கழித்தார்கள். இதனால் அவரவர் வீட்டு சிலந்திகளுக்குதான் கொண்டாட்டம். அவர்கள் நூல் நூற்காவிட்டால் என்ன, நாம் நூற்போம் என்று அந்த ராட்டினங்களில் தம் நுல்களால் அவை வலைகள் பின்னின! தம்மிடம் சேர்க்கப்படும் நூற்கண்டுகள், அவற்றுக்கான ஊதியம், அதற்குமுன் வாங்கப்பட்ட பஞ்சு, உபகரணங்கள் என்று எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துக்கொண்டு செல்வந்தருக்கு அவ்வப்போது தகவல் தருவார் கணக்குப்பிள்ளை.

அந்தத் தகவலின் அடிப்படையில் யாரெல்லாம் தான் கொடுத்த மூலப்பொருட்களை வைத்து உண்மையாக உழைத்திருக்கிறார்கள், யாரெல்லாம் சோம்பியிருக்கிறார்கள் என்று அவருக்கு விவரங்கள் தெரிந்தன. கந்தர் அலங்காரம் விவரிப்பதுபோல, ‘தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு காலால் எழுப்பி வளை முதுகு ஓட்டி கை நாற்றி நரம்பால் ஆர்க்கையிட்டு தசைகொண்டு மேய்ந்து’ வந்தது இந்த உடம்பு. உலகத்தில் உள்ள பிராணிகள் யாவற்றிற்கும் எவ்வாறு உடல் அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு அழகாக வகுத்துத் தந்திருக்கிறான் இறைவன். குறிப்பாக மனிதன், தன்னைத் தொழுது, தன் அருளாகிய செல்வத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்று தநு, கரணம் புவனம், போகம் ஆகியவற்றையும் நல்கியிருக்கிறான்.

அவன் பட்சபாதம் இன்றி யாவருக்கும் ஒரேமாதிரியாகத்தான் அளித்திருக்கிறான். ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட யாவரும் இறைவன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் செயல்படுகின்றனரா? இல்லை, இறைவன் அளித்த வாய்ப்புகள், சலுகைகள் எல்லாவற்றையும் மூலதனமாக வைத்து இறைவனின் அன்புச் செல்வத்தை ஈட்டுவதில்லை. இறைவன் அளித்திருக்கும் செல்வங்களை முறையாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்:

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச
மார்க்கமே.
(திருமந்திரம்)

‘திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து அளித்தல், அவற்றைத் தொடுத்துக் கொடுத்தல், அலகிடல், மெழுகல், ஊர்தி சுமத்தல், பலவகைத் திருமஞ்சனப் பொருட்களைக் கொணர்ந்து கொடுத்தல் போன்ற எளிய பணிகளாகிய தாச மார்க்கத்தில் ஈடுபடுவது தொண்டர்தம் நெறியாகும்’ என்கிறார் திருமூலர். சரி, இவ்வாறு தாச மார்க்கத்தில் ஈடுபட மனம் விழையவில்லையா, இப்போதும் இறைவன் அளித்திருக்கும் உறுப்புகளை உபயோகித்து அவனை நினைக்கலாமே!

தலையே நீவணங்காய் தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.
மூக்கே நீமுரலாய் முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை
மூக்கே நீமுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.
கைகாள் கூப்பித்தொழீர் கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.

‘‘தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. கண்களே கடல் விஷத்தை உண்ட நீலகண்டனாய், எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் எம்பெருமானை நீங்கள் காணுங்கள். செவிகளே, செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள். மூக்கே, சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி நுகர்வாயாக. வாயே, மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக. நெஞ்சே, மேல்நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக. கைகளே, மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக. நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் திரு அங்கமாலையில் இவ்வாறு பாடியிருக்கிறார்.

ஆக்கை யாற்பயனென் அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.

எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்? திருநாவுக்கரசர் சொல்வதுபோல் சில அன்பர்கள் இறைவன் முன் சென்று அவனளித்த கையினால் தொழுதும், உடலால் கீழே விழுந்து வணங்கியும், தூய்மையான மலர்களைக் கொண்டு அர்ச்சித்தும், அவனுடைய புகழை வாயாரப் பாடியும் அன்பு செய்கின்றனர். அவர்கள் முதலில் இறைவனைத் தொழுகிறார்கள். பிறகு தூமலர் தூவுகின்றனர். பின் புகழ் பாடித் துதிக்கின்றனர். அந்தத் துதியினூடே உள்ளம் நைந்து அழுகின்றனர். அழ அழ அவர்களுக்கு ஈசன் மேல் இருக்கும் அன்பு முற்றுகிறது. புலம்புகிறார்கள், அரற்றுகிறார்கள். இப்படியாக அவர்களுடைய அன்பு நாளுக்கு நாள் முதிர்ச்சியடைகிறது.

மற்றொரு வகைக் கூட்டத்தாரும் உண்டு. இவர்கள் வெட்டியாகப் பொழுதைப் போக்குபவர்கள். இறைவன் எதற்காக இந்த உடலைக் கொடுத்தானோ அதற்குரிய பணிகளை மேற்கொள்ளாமல், வீணே காலத்தைக் கழித்துத் தம் கடமைகளையும் புறக்கணிக்கிறார்கள் இவர்கள். தம்மிடம் ஒப்படைக்கப்படும் பஞ்சு நூல் கணக்கைக் கணக்குப்பிள்ளை எழுதியதுபோலவே மேற்கண்ட இரண்டு சாரார்களுடைய கணக்கையும் இறைவன் எழுதி வைத்துக் கொள்கிறான். ஈசன் எழுதிவைத்துக்கொள்ளும் இந்தக் கணக்கில், நாம் எந்தப் பக்கத்தில் சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும். நல்ல கூலி வாங்கும் கூட்டத்தோடு அல்லவா சேரவேண்டும்? அவனை நினைந்து தொழுது, தூமலர் தூவித் துதித்து, பக்தி மிகுத்து அரற்றி நிற்பவர் கூட்டத்தாரோடு நாம் இணைந்தால், ‘இவன் நாம் அருளியதைத் தக்கவண்ணம் பயன்படுத்தி உழைத்தான். இவனுக்கு நல்ல கூலி கொடுக்க வேண்டும்,’ என்று திருவுள்ளம் கொள்வான்.

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்(து)
உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின்றானே.
(திருமந்திரம்)

தேவர்கள் உளம் மகிழ்ந்து ஆயிரம் பெயர்களைச் சொல்லி சிவனைப் போற்றி தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக் கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள்பாலே பேரருள்
உடையவனாகின்றான்.

இறைவன் எழுதும் இந்தச் சின்னக்
கணக்கைப் பற்றி திருநாவுக்கரசர் சொல்கிறார்:
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே.

பொருள்: தன்னைத் தொழுது தூமலர் தூவி அர்ச்சித்து துதிகளைச் சொல்லி நின்று அன்பு மீதூர்ந்தமையால் அழுது தன்பால் இடையறாத விருப்பத்தைப் பெற்றுப் புலம்பி நைந்து போகின்றவர்களையும், வீணே பொழுது போக்கித் தாம் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பவர்களையும், அவரவர் செயலோடு வேறு வேறாகப் பிரித்துச் சிறுகணக்காக இன்னம்பரிலே எழுந்தருளியிருக்கும் இறைவன் எழுதுவான். ’தொழுதலும், மலர் தூவலும் கரங்களின் செயல்; வாயாரத் துதித்தல் வாயின் செயல்; பக்தியால் காமுறுதல் மனத்தின் செயல். இங்கு கீழ்க்கணக்கு என்று சொல்கிறார். ‘பதினெண்கீழ் கணக்கு’ என்று தமிழ் நூல்களில் ஒரு வரிசைக்கு வழங்கப்படுகிறது. அங்கே கணக்கு என்பது நூலைக் குறிக்கும். இங்கே கணக்கு என்பது உடற்கடமைகளின் பட்டியலைக் குறிக்கும்.
இன்னம்பூர் என்ற தலம் கும்பகோணத்திற்கு மேற்கே இருக்கிறது. இங்குள்ள இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்று பெயர். அந்தத் திருநாமத்தை நினைவு கூறுவதற்காக, அப்பர் சுவாமிகள், ‘இவர் அவரவர் செயற் கணக்கை எழுதவும் அறிந்தவர்’ என்று இந்தப் பதிகத்தில் (திருமுறையில் 21ம் பதிகத்தின் எட்டாவது பாடல்) கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here