வெய்யில் வேளைகளில் கரியமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை வெளிப்படுத்துகின்றன மரங்கள். அவ்வகையில் மனித உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பணியைச் செய்கின்றன அவை. மழை இல்லாவிட்டால் வாழ்வேது? மரங்களை அதிகம் வளர்ப்பதன் மூலமே மழையைப் பொழியச் செய்ய முடியும் என்கிறது இயற்கை விஞ்ஞானம். அலையாத்தி’ மரங்கள் என்னும் ஒருவகை மரங்களைக் கடற்கரையில் நட்டு வளர்ப்பதன் மூலம் சுனாமியைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது. விறகெரிக்கவும் மேசை போன்ற பயன்படு பொருட்கள் செய்யவும் மரங்கள் தொன்றுதொட்டுப் பயன்பட்டு வருகின்றன.

இப்படிப் பல வகைகளில் மனித சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழும் மரத்தைப்பற்றி வள்ளுவர் கவனம் செலுத்தாதிருப்பாரா? தம் கருத்தைச் சொல்ல பல சந்தர்ப்பங்களில் மரத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார் அவர்.

அன்பகத் தில்லான் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த் தற்று.’ (குறள் எண்-78)

உள்ளத்தில் அன்பில்லாமல் வாழும் வாழ்க்கையானது, வளமில்லாத வறண்ட பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்ததைப் போன்றது.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடையான் கண் படின்.’ (குறள் எண்-216)

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப்போல எல்லோருக்கும் பயன் தரும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.’ (குறள் எண்217)

பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புக்களும் மருந்தாகப் பயன்படுவது போன்றது.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்’ (குறள் எண்-576)

ஒருவருக்குக் கண் இருந்தும், அந்தக் கண்ணில் அன்பும் இரக்கமும் இல்லையென்றால் அவர் மரத்துக்குச் சமமானவரே.

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதிலார்
மரம் மக்கள் ஆதலே வேறு.’ (குறள் எண்600)

மனத்தில் ஊக்கமில்லாதவர்கள், வடிவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரத்தைப் போன்றவர்களே.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.’ (குறள் எண்-879)

முள்மரத்தை அது இளையதாக இருக்கும்போதே வெட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் அது வளர்ந்து தன்னை அழிக்க எண்ணுபவரின் கையைக் கிழிக்கும். (பகையையும் அது முற்றுவதற்கு முன்னரே வீழ்த்திவிட வேண்டும்.)

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்
வர் மக்கட்பண் பில்லா தவர்.’ (குறள் எண் -997)

அரம்போல் கூர்மையான அறிவு உடையவராய் இருந்தாலும் மனிதப் பண்பில்லாதவர்கள் மரத்திற்குச் சமமானவர்களே.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சுமரம் பழுத் தற்று.’ (குறள் எண்-1008)

ஒருவராலும் விரும்பப் படாதவனுடைய செல்வம், ஊர்நடுவே காய்த்துக் குலுங்குகிற நச்சு மரத்தைப் போன்றதுதான். (அச்செல்வத்தால் எப்பயனும் இல்லை.) திருக்குறளில் மட்டுமல்ல, நம் புராணங்களிலும் மரங்கள் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன. மரவுரி என்பது மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் உடை. அந்த முரட்டு உடையைத் தரித்துத்தான் ராமனும் சீதையும் லட்சுமணனும் கானகம் சென்றார்கள். சீதாதேவி மரவுரியை எப்படி உடுத்துவது எனத் தெரியாமல் தவித்ததாகவும் அப்போது ராமன் சீதை உடை உடுத்த உதவியதாகவும் ராமாயணம் பேசுகிறது.

வனவாச காலத்தில் வசிப்பதற்கு ஏற்ற குடிலை லட்சுமணனே நிர்மாணிக்கிறான். மூங்கில் மரத்தின் கம்புகளை நட்டும் தென்னை ஓலைகளை மேலே வேய்ந்தும் அவன் வீடு கட்டிய ஆற்றலை ராமன் புகழ்கிறான். வீடுதரும் ராமபிரானுக்கு வீடு தந்த பெருமை லட்சுமணனுடையது! அந்தக் குடிலின் அருகே வளர்ந்திருந்த மரத்தின் இலைகள் குடிலின் வெளிச்சத்தை மறைக்கின்றன. சீதை அதுகுறித்துச் சொன்னதும் லட்சுமணன் மரத்தையே வெட்டப் போகிறான். சீதாதேவி அவ்விதம் மரத்தை வெட்டலாகாது என அறிவுறுத்துகிறாள். அதை ஏற்ற லட்சுமணன், ஒரே அம்பால் அந்த மரத்தின் அத்தனை இலைகளையும் அகலத்தைக் குறைத்துச் சிறிய இலைகளாக்குகிறான். அதன்பின் குடிலில் நல்ல வெளிச்சம் கிடைக்கிறது.

அந்த மரம் புளிய மரம். முற்காலத்தில் புளிய மரம் வாழை மரத்தின் இலைகளைப் போல் பெரிய இலைகளைக் கொண்டிருந்தது என்றும் லட்சுமணனால் சிறிதாக்கப் பட்ட பின்புதான் இப்போதைய வடிவத்தைப் பெற்றது என்றும் ஓர் அபூர்வராமாயணக் கதை சொல்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஓராண்டு அஞ்ஞாத வாசம்’ அனுபவிக்கிறார்கள். அவ்விதம் மறைந்திருந்து யாரு மறியாமல் வாழவேண்டிய காலகட்டத்திற்கு முன் அர்ச்சுனன் பிரம்மாண்டமான ஒரு வன்னி மரத்தின் பொந்தில்தான் தன் அஸ்திரங்களை பாதுகாப்பாக வைக்கிறான்.

ஊர்வசியால் சாபம் பெற்ற அர்ச்சுனன், பின் பிருகன்னளை என்ற திருநங்கையாக ஓராண்டு வாழ்கிறான். அந்தக் காலம் முடியும் தருணத்தில் அதே வன்னி மரத்தைத் தேடிவந்து வில்லையும் அம்பையும் அர்ச்சுனன் எடுத்துக் கொள்கிறான். அர்ச்சுனனின் வலிமை வாய்ந்த காண்டீபம் என்ற வில்லினையும் மந்திர சக்தி வாய்ந்த அம்புகளையும் ஓராண்டு பாதுகாத்த பெருமை வன்னி மரத்திற்கு உரியது. `தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்’ என்கிறது பாஞ்சாலி சபதப் பாடல். தருமத்தைச் சூது கவ்விய காலத்தில் அஸ்திரங்களைப் பாதுகாத்தும் தருமம் மறுபடி வெல்ல வேண்டிய காலத்தில் அஸ்திரங்களை அளித்தும் அறம்வெல்ல உதவியிருக்கிறது வன்னி மரம்.

வனவாச காலத்தின் பன்னிரண்டாம் வருட இறுதியில் பாஞ்சாலி ஓர் அபூர்வமான மாமரத்தின் கனியைப் பறித்து விட்டாள். அந்த மரம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே ஒரு கனியைத் தரும் மரம். சந்தீப முனிவர் பன்னிரண்டு ஆண்டு தவம் நிகழ்த்திய பின் அந்த மரத்தில் பழுத்த அந்தக் கனியைத் தான் உண்பார். அன்று மாலை அவர் தவம் நிறைவுறும் நாள். அப்போது தன் தவச் சக்தியால் மரத்தில் பழுத்த கனியைக் காணாது அவர் திகைப்பார். கனியைப் பறித்தவர்களை அவர் சபிப்பார். பாண்டவர்களிடம் இந்த விவரத்தைச் சொல்கிறான் கண்ணன். சாபத்திலிருந்து அவர்கள் தப்பிக்க வேண்டுமானால் கனி மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் ஆழ்மனத்தில் உள்ள ரகசியத்தை வெளிப்படுத்தினால் கனி மேலே எழுந்து மரத்தில் ஒட்டும் என்கிறார் கிருஷ்ணர். பாண்டவர்கள் தங்கள் ஆழ்மன எண்ணங்களையெல்லாம் சொல்ல கனி மெல்ல மெல்ல மேலே செல்கிறது. ஆனாலும் மரத்தில் ஒட்ட வேண்டும் என்றால் பாஞ்சாலியும் தன் ஆழ்மன எண்ணத்தைச் சொல்ல வேண்டும். சற்றுத் தயங்கிய பாஞ்சாலி, பின் தன்னையும் தன் கணவர்களையும் சாபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன் மன எண்ணத்தைச் சொல்லியே விடுகிறாள். கர்ணனையும் அவள் மனத்தளவில் விரும்புகிறாள் என்பதுதான் அந்த எண்ணம். அவள் இதைச் சொன்னதும் கனி மரத்தில் போய் ஒட்டிக் கொண்டது என்கிறது மகாபாரதம்.

பெண்களின் மனம் கடலை விடவும் ஆழமானது என்பதையும் அவர்களின் உள் உணர்வுகளை யாராலும் புரிந்துகெள்ள இயலாது என்பதையும் விளக்குவதற்காக மகாபாரதம் இக்கதையை விவரிக்கிறது. கண்ணன் கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரித்த லீலையை பக்தர்கள் அறிவார்கள். அப்போது யமுனை ஆற்றங்கரையில், புன்னை மரத்தின் கிளையில்தான் கண்ணன் அமர்ந்திருந்தான் என்கிறது பாகவதம். பால கிருஷ்ணன் யசோதையால் உரலில் கட்டுண்ட போது, தான் கட்டுண்ட உரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து செல்கிறான். அவன் அருகருகாக வளர்ந்திருந்த இரண்டு மருத மரங்களின் இடையே செல்லும்போது அவை முறிந்து விழுகின்றன.

குபேரனது புத்திரர்களான நளகூபன் என்பவனும் மணிக்ரீவன் என்பவனும் நாரதரின் சாபத்தால் கோகுலத்தில் மருத மரங்களாகப் பிறந்திருந்தனர். அவர்கள் கண்ணனது ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றனர். மெளன உபதேசம் நிகழ்த்தும் தட்சிணாமூர்த்தியாகிய சிவபெருமான், ஆலமரத்தின் அடியிலிருந்து சீடர்களுக்கு அருள்பாலிப்பதால், ஆலமர் செல்வன் என்று போற்றப்படுகிறார். கந்தக் கடவுள் தன்னை வதம் செய்ய வந்தபோது சூரபத்மன் மரமாக நின்றான். முருகன் சக்தி வேலால் மரத்தை இரண்டாகப் பிளக்க,. அதன் ஒரு பகுதி மயிலாகவும் இன்னொரு பகுதி சேவலாகவும் மாறிற்று.

மயிலை வாகனமாகக் கொண்ட முருகன் சேவலைக் கொடியாக ஏற்றான். சேவலங் கொடியோன் காப்ப’ என அவனைச் சேவற்கொடியோனாகப் பாடித் துதிக்கிறது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து. போதிமரத்தடியில் தவம் செய்துதான் புத்தர் ஞானம் பெற்றார். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற மகத்தான உண்மையை புத்தர் கண்டுபிடித்தது போதி மரத்தின் அடியிலிருந்துதான். போதி மரம் என்பது அரச மரம்தான். சொர்க்கத்தில் கற்பக மரம் உண்டு. அது நினைத்ததை எல்லாம் தரும் வல்லமை பெற்றது என்று புராணங்கள் கூறுகின்றன.

சென்னை மயிலை கபாலி கோயிலின் தாயார் பெயர் கற்பகவல்லி. நினைத்த அனைத்தையும் அருளும் அம்பிகை என்பதால் அப்பெயர். அவ்வையார் தாம் எழுதிய மூதுரை என்ற செய்யுள் நூலில், முன்வினைப் படியே அனைத்தும் நடக்கும் என்ற கருத்தை விளக்கும்போது கற்பக மரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவன் நினைத்ததைத் தரும் கற்பக மரத்தடியில் நிற்கும்போது அந்த மரம் உண்டாலே உயிர்போகும் காஞ்சிரங்காயைத் தருமானால் அதை வினைப்பயன் என்றுணர்ந்து ஆறுதல் அடையவேண்டும் என்கிறார், அவ்வை.

எழுதிய வாறேகாண் இரங்கும் மடநெஞ்சே!
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை!’

அவ்வையார் கல்வியறிவில்லாதவர் களையும் குறிப்பறிந்து இயங்க இயலாதவர்களையும் மரங்கள் எனக் கூறி நகைக்கிறார்.

கவையாகிக் கொம்பாகிக் கானகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன் மரம்.’

சுந்தரக் கவிராயர் என்னும் கவிஞர் எழுதிய தனிப்பாடல், மரம் என்ற சொல்லை சிலேடையாய்க் கையாண்டு பயில்பவர் களுக்குத் தமிழின்பம் அளிக்கிறது.

மரமது மரத்தி லேறி
மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும்போது
மரமதைக் கண்ட மாந்தர்
மரமொடு மரமெடுத்தார்!’

மரம் என்ற சொல் அரச மரம்,மாமரம், வேல மரம், வேங்கை மரம், ஆல மரம், அத்தி மரம் ஆகிய பல மரங்களையும் அதன் வழியே அரசன், குதிரை, வேல், வேங்கை, ஆல், அத்தி ஆகிய பலவற்றையும் குறித்துக் கையாளப்பட்டுள்ளது. அரசன் குதிரையில் வேலைத் தோளில் வைத்து ஏறி வேட்டைக்குச் செல்கிறான். அங்கே வேங்கையை வேலால் குத்திக் கொல்கிறான். மரங்களடர்ந்த கானக வழியாக அவன் மீண்டும் அரண்மனைக்கு வரும்போது பெண்கள் ஆலத்தி எடுத்து அவனை வரவேற்கிறார்கள் என்பது இப்பாடலின் பொருள்.
‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெலாம் சொப்பனந் தானோ, பல தோற்ற மயக்கங்களோ…’ என்ற மகாகவி பாரதியாரின் தத்துவப் பாடல் பெரும்புகழ் பெற்றது. எல்லாமே மாயைதானா எனத் தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொள்கிறார் பாரதி:

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெலாம்
கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ?’

என மரச்செறிவும் தோற்ற மயக்கமா என விசாரணை செய்கிறது அவரின் ஆழ்ந்த கவியுள்ளம். புதுச்சேரி ஸ்ரீஅன்னை மரங்களுடனும் மலர்களுடனும் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர். அரவிந்த ஆசிரமத்தில் இருந்த ஒரு வயதான மாமரத்தை வெட்டிவிட முடிவெடுத்தார்கள். அன்னையிடம் அனுமதி கேட்டார்கள். அந்த மரத்தில் வாழும் குட்டித் தேவதை ஒன்று, மரத்தை வெட்ட வேண்டாம் என்று முந்திய இரவு தன்னிடம் கோரிக்கை வைத்ததாகச் சொன்னார் ஸ்ரீஅன்னை.

மரத்தை வெட்டப் போவதை முன்கூட்டியே அறிந்து மர தேவதை அன்னையிடம் தன் வருத்தத்தைச் சொல்லிவிட்டது போலும். அன்னையின் கட்டளைப்படி மரம் வெட்டும் எண்ணம் கைவிடப் பட்டது. மண்ணுக்கும் மரத்திற்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது என்பதைத் திரைப்பாடல்களும் பேசுகின்றன. `சாரதா’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு காதல் பாட்டு. கே.வி. மகாதேவன் இசையில் டி.எம்.செளந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடியுள்ள பாடல். காதலி மண்ணானால் தான் மரம் ஆவதாகக் காதலன் குறிப்பிடுகிறான்:

கண்ணானால்நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண் என்றால் நான் மரமாவேன்
மழை என்றால் நான் பயிராவேன்…’

இன்னொரு திரைப்பாடல் `தைபிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி கே.வி. மகாதேவன் இசையில், எம்.எஸ். ராஜேஸ்வரி குரலில் ஒலித்த பாடல். மண் மரத்தைச் சுமப்பதை ஒருநாளும் பாரமாகக் கருதுவதில்லை. அதுபோல் தாயும் தன் குழந்தையைப் பாரமாகக் கருதமாட்டாள் என மண்ணையும் மரத்தையும் உதாரணங்களாகக் காட்டித் தாய்ப்பாசத்தின் பெருமையைப் பேசுகிறது இது.

மண்ணுக்கு மரம்பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா?’

மரம் விறகாகிப் பயன் தரும். மனித உடல் விறகுபோல் கூடப் பயன்படாது என்று மனித உடலின் மலினத் தன்மையைப் பேசுகிறது திருவிளையாடல் திரைப் படத்தில் டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும்

பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்!
கேட்டா விறகுக்காகுமா ஞானத்
தங்கமே தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?’

என்ற கண்ணதாசன் பாடல். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதாக மரத்தையும் உள்ளிட்டு அனைத்துப் பயிர்களையும் குறித்த தம் அக்கறையைத் தெரிவித்திருக்கிறார் வள்ளலார். வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரையும் கவர்ந்த மரங்களைப் பாதுகாப்பதில் இப்போது அக்கறை கூடியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். வள்ளுவர் போற்றிய மரத்தை நாமும் போற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here